தமிழ் இணையம் மலேசியா : ஓர் அறிமுகம்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
பல்வேறு இனமக்கள் அமைதியுடனும் நட்புறவுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் வளமார் மலேசியாவிலிருந்து உதயமாகும் இத்தமிழ் இணையத்தளம், உலகவாழ் தமிழர் அனைவரும் தகவல், தொடர்புத்துறை தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்களாகவும், அறிவார்ந்த சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும் திகழவேண்டும் என்னும் நல்நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். தமிழின மேம்பாடு கருதியும் தமிழர் நலனைக் கருத்தில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வலைத்தளம், குடும்ப உறுப்பினகள் அனைவரும்- சிறுவர், இளையோர், மாணவர், மகளிர், முதியோர் ஆகியோர்- பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களையும் செய்திகளையும் இணையம் வழி பெற்று தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்னும் குறிக்கோள் காரணமாகவும் தோற்றுவிக்கப்பட்டதாகும். காலப்போக்கில் உலகவாழ் தமிழர்க்கு ஓர் உன்னத மின் நூலகமாகவும் அறிவுக் கருவூலகமாகவும் கலைக்களஞ்சியமாகவும் அமைவதோடு மட்டுமன்றி, புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு வாழ்ந்து வரும் தமிழ்ப் பெருமக்களை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான உறவுப் பாலமாகவும் 'தமிழ் இணையம் மலேசியா' அமையவேண்டும் என்பது எங்கள் தொலைநோக்கும் இலட்சியமுமாகும்.
இந்த வலைத்தளத்தில் மாணவர்க்குப் பயன்படும் பல்வேறு தகவல்கள், கட்டுரைகள், நீதிக் கதைகள் ஆகியவையும், இளைய தலைமுறையினர், மகளிர் மற்றும் பெரியோர்க்கு அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் / தொழில்நுட்ப, பொருளாதார, இலக்கிய, மருத்துவ, தன்முனைப்புக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள், நகைச்சுவை, உலக நடப்புகள் முதலியனவும் இடம்பெறும். மேலும், நம் அறிவை வளர்த்துக் கொள்ளத் துணைபுரியும் பல புதிய அம்சங்களும் ஆக்கங்களும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்படும். 'தமிழ்கூறும் நல்லுல'கிலிருந்து வெளிவரும் தமிழ் இணைய இதழ்கள் மற்றும் வலைத்தளங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனளிக்கும் ஆக்கங்களையும் தகவல்களையும் செய்திகளையும் நம்மவர்க்கு வழங்கும் நோக்கில் அவற்றின் இணைப்புகளையும் நம் இணையத்தளம் கொண்டிருக்கும். நம் வலைத்தளத்தின் உள்ளடக்கம் மாதம் இருமுறை விரிவாக்கம் காணும்.
உலகளாவிய தமிழ் மக்கள் தங்கள் அறிவு மேம்பாடு கருதி இந்த இணையத் தளத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வர் என்னும் நம்பிக்கையில் இதனை அவர்களுக்குக் காணிக்கையாகப் படைக்கின்றோம்.
பீட்டர் ஜான்சன்
உங்கள் கருத்துகள், படைப்புகள் மற்றும் ஆலோசனைகளைக் கீழ்க்காணும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
webmaster@tamilnetmalaysia.net